நட்புக்காக செய்தேன் – போஸ்டர் விவகாரத்தில் மன்னிப்புக் கேட்ட விஜய் சேதுபதி …
இன்று காலையில் வெளியான ஒருப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பர்த்த மக்கள் விஜய் சேதுபதியைக் கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர்.
கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்ற பெயரில் புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு இன்று காலை சென்னை முழுவதும் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
ஆனால் போஸ்டரில் புதுமை செய்வதாக எண்ணிய படக்குழுவினர் படத்தின் தலைப்பில் உள்ள கடலை எனும் வார்த்தையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் கோடு மட்டும் போட்டு வெளியிட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் முகம் சுளிக்க ஆரம்பித்தனர். ஆனால் அதை விட அதிகமாக விஜய் சேதுபதியை சமூக வலைதளங்களில் திட்ட ஆரம்பித்தனர். இவ்வளவு மோசமான தலைப்பைக் கொண்ட படத்தின் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிடலாமா எனக் கேள்விகளும் எழுந்துள்ளன.
இதையடுத்து விஷயம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த விஜய் சேதுபதி இப்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும் அந்தப் படத்தின் இயக்குனர் தனக்கு நீண்ட நாள் நண்பர் என்றும் அவரின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் இந்தப் பட வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவருக்கு உதவும் பொருட்டு இந்த செயலை செய்ததாகவும் ஆனால் அது இப்படி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.