இது என் டீசரே இல்லை… புலம்பிய விஜய் சேதுபதி பட இயக்குனர்!
விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ணா ரோஹ்நாத் இயக்கியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் பட டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். இப்படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி இலங்கையில் இருந்து வந்து வாய்ப்புகளை தேடும் இசைக்கலைஞராக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. ஆனால் படத்தின் இயக்குனரான வெங்கட கிருஷ்ணா சமூகவலைதளப் பக்கத்தில் அது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில் இந்த டீசருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் உருவாக்கி வைத்திருந்த டீசர் இதுவல்ல. என் தலையீடு இல்லாமலேயே தயாரிப்பு நிறுவனம் இந்த டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளது என்று புலம்பித் தள்ளியுள்ளார். இது சமூகவலைதளங்களில் கவனிப்பைப் பெற்றுள்ளது.