கமல்ஹாசன் காஃபி கொடுத்தார், பாதிக்குமேல் என்னால் பருகமுடியவில்லை: வைரமுத்து
மகா கவிதை என்ற நூல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இந்நூல் வைரமுத்துவின் 39வது நூல் ஆகும். இதற்கான அழைப்பிதழை வைரமுத்து கமல்ஹாசனிடம் நேரில் கொடுத்தபோது நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து கவிதை வடிவில் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
மகா கவிதை
வெளியீட்டு விழாவில்
வாழ்த்துரை வழங்க வருகைதரும்
கலைஞானி
கமல்ஹாசனைச் சந்தித்து
அழைப்பிதழும் நூலும் வழங்கினேன்
எனக்கும் அவருக்கும்
இடையிலிருந்த நாற்காலியில்
42ஆண்டு நினைவுகள்
அமர்ந்திருந்தன
கலை அரசியல் மதம் என்று
தவளைக்கல்லாய்த் தாவித்தாவி
எண்ணூர்
எண்ணெய்ப் பிசுக்கில்
இடறி நின்றது உரையாடல்
குடிதண்ணீர்
எண்ணெய் ஆவதும்
எண்ணெய்
தண்ணீரின் ஆடையாவதும்
காலங்காலமாய்க்
கழுவப்படாத
கண்ணீர்ப் பிசுக்கில்
எண்ணெய்ப் பிசுக்கும்
ஏறி நிற்பதும்
மீனென்ற
வேட்டைப் பொருளும்
கொக்கென்ற
வேட்டையாடு பொருளும்
சேர்ந்து செத்து மிதப்பதும்
நதி இறங்க
வழியில்லாத கடலில்
எண்ணெய் இறங்குவதும்
உழைக்கும் மக்கள்
பிழைக்க வழியின்றிப்
பெருந்துயர் கொள்வதும்
எத்துணை கொடுமையென்று
சோகம் பகிர்ந்தோம்
இதற்கு யார் பொறுப்பு
என்றார் கமல்
லாபம் ஈட்டும்
நிறுவனம் என்றேன்
காஃபி கொடுத்தார்
பாதிக்குமேல் என்னால்
பருகமுடியவில்லை
Edited by Mahendran