சர்கார் படத்துக்கு எதிரான அதிமுக வின் வன்முறைச் செயலுக்கு தமுஎகச கடும் கண்டனம்

அதிமுக வின் வன்முறைச் செயலுக்கு தமுஎகச கடும் கண்டனம்" width="740" />
VM| Last Updated: சனி, 10 நவம்பர் 2018 (14:24 IST)
சர்கார் படத்தை திரையிடுவதுக்கு எதிராக ஆளும் அதிமுகவினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைச் செயலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்கார் படத்தின் மூலக்கதை திருடப்பட்டது குறித்த புகார் நிரூபிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்டவருடன் சமரசம் செய்துகொண்டு சர்கார் படம் வெளியாகியுள்ளது. அரசியல் கட்சிகள் பற்றிய அசூயையான பார்வை, நீதிமன்றம் மீது கட்டமைக்கப்படும் போலி நம்பிக்கை, சேமநல அரசு என்கிற நிலையில் இருந்து வெகுமக்களுக்கு அரசு வழங்கியாக வேண்டிய வாழ்வாதார உதவிகளை ஏளனம் செய்கிற, மறுக்கிற கார்ப்பரேட் வக்கிரம், முன்னுரிமை அடிப்படையில் சமூகத்தின் பல்வேறு பின்தங்கிய பிரிவினருக்கு சமூகநீதி அடிப்படையில்  வழங்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவப் பலன்கள் குறித்து ஆதிக்கச்சாதியினர் கொண்டுள்ள குமைச்சல் என இப்படம் முன்வைக்கும் கருத்தியலை தமுஎகச ஏற்கவில்லை. 
 
சமூகநீதியை ஆதாரமாகக் கொண்டு உருவான ஓர் இயக்கத்தின் நிழலில், அதன் சத்தையும் சாரத்தையும் உறிஞ்சி வளர்ந்தவர்களின் சன் பிக்சர்ஸ் இப்படியொரு எதிர்நிலைக் கருத்தியல் படத்தை தயாரிக்குமளவுக்கு அரசியல் வறுமையில் வீழ்ந்திருப்பதும் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. 
 
ஆனால் இதனாலெல்லாம் இப்படியொரு படத்தை எடுப்பதற்கு சர்கார் குழுவினருக்கு உள்ள உரிமையை யாரும் மறுத்துவிட முடியாது. அதுபோலவே படத்தின் உள்ளடக்கம், படமாக்கப்பட்ட விதம் குறித்து விமர்சிப்பதற்கான உரிமை பார்வையாளர்களுக்கு இருக்கிறது.  நடப்பரசியல் மீது மக்களுக்குள்ள ஒவ்வாமையையும், அதிருப்தியையும் காசாக்கும் மலிவான உத்தியில்தான் இந்தப்படம் உருவாகியுள்ளதேயன்றி, அதற்கு மாற்றான ஒரு ஆக்கப்பூர்வ அரசியலை முன்வைப்பதை படம் நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்று பரவலாகிவரும் விமர்சனம் நியாயமானதே. 
 
முறையாக தணிக்கை செய்யப்பட்டு திரையிடலுக்கு வந்துள்ள இப்படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருக்குமானால் அதுகுறித்த முறையீட்டை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வழியுள்ளது. ஆனால் தமிழக ஆளுங்கட்சியினர் சிலர் அப்படியான அணுகுமுறையை மேற்கொள்ளாமல், படத்தையே தடை செய்ய வேண்டும், காட்சிகளை நீக்கவேண்டும் என்று மிரட்டி, படத்திற்கான விளம்பரங்களைச் சேதப்படுத்தி, காட்சிகளை ரத்து செய்யுமளவுக்கு திரையரங்குகளில் ரகளை செய்து சர்கார் படத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினர். 
 
அரசியல் சாசனம் குடிமக்களுக்கு உறுதி செய்துள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் தமிழக அமைச்சர்கள் சிலரும் சர்கார் படம் தொடர்பாக கண்ணியக்குறைவாகவும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும்  பேசியும் மிரட்டியும் வந்தனர். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய அவர்களே இவ்வாறு சுதந்திரமான திரையிடலுக்கு தடைகளை ஏற்படுத்தி சர்கார் படக்குழுவினரை மறு தணிக்கைக்கு செல்லும்படியான நெருக்கடியை உருவாக்கியுள்ளதற்கு தமுஎகச கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.  
 
தமிழக  அரசின் ஆதரவோடு அஇஅதிமுகவினர் மேற்கொண்டுள்ள இந்த அடாவடித்தனமான நடவடிக்கையானது, கலைஞர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் தலையிடுவதே ஆகும். இதனை கருத்துரிமையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் எதிர்த்து குரலெழுப்புமாறு" அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :