திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (17:28 IST)

எழுவர் விடுதலைக்கு ஆதரவாக விஜய்சேதுபதி வேண்டுகோள்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் திரையுலகத்தினர் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் உள்ளவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற தீர்ர்ப்பையடுத்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் அந்த சட்டத்தினை அமல்படுத்தாமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார். இதனையடுத்து தமிழர்கள் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எழுவர் விடுதலைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம், சைக்கிள் பயணம் மற்றும் ஆளுநருக்கு கடிதம் அனுப்புதல் போன்ற புது விதமான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அதையடுத்து தற்போது தமிழ்த் திரையுலகினரும் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி இது குறித்த கேள்விக்கு ‘இது வெறும் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. மனித உரிமைகளைக் கருத்தில் கொள்வதற்கான கோரிக்கை. தயவு செய்து இரக்கம் கொள்ளுங்கள் ஆளுநரே. தயவுசெய்து செயல்படுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

இது போலவே தமிழ் திரையுலகைச் சேர்ந்த இயக்குனர் பா ரஞ்சித், இயக்குனர் ராம் மற்றும் நடிகர் ஜி வி பிரகாஷ் ஆகியோரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.