ஸ்டண்ட் கலைஞர் மரணம்… நாளை தமிழ் சினிமாவில் படப்பிடிப்புகள் ரத்து!
கார்த்தி நடித்து வரும் 'சர்தார்-2படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் ப்ரமோ காட்சியைப் படமாக்கும் போது ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்தது.
இந்நிலையில் ஏழுமலை மரணத்தை அடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் நாளை சென்னையில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. அதனால் சென்னையில் நடக்கும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக ஃபெஃப்ஸி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “படப்பிடிப்பு நடக்கும் போது தகுந்த பாதுகாப்பு கருவிகள், ஆம்புலன்ஸுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம். பெரும்பாலான நிறுவனங்கள் இதை பின்பற்றுவது இல்லை. அதனால் சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 25-ம் தேதி கமலா திரையரங்கில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம்நடத்துகிறோம். அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக, சென்னையில் உள்ளூர் படப்பிடிப்புகள் (சின்னத் திரை, பெரியதிரை) நடைபெறாது.
இக்கூட்டத்தில், திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கம், சினி மற்றும் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் சங்கம், சண்டை இயக்குநர்கள், கலைஞர்கள் சங்கம், நடன இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், செட்டிங் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகிய 5 சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளது.