1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2024 (21:40 IST)

முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்.! தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்.!!

Vishal
தயாரிப்பாளர்கள் என சொல்லிக்கொள்பவர்களே, முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் விஷால் சவால் விடுத்துள்ளார்.
 
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்,  எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை துவங்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்தது.
 
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஷால், இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசனை உள்ளடக்கிய கூட்டு முடிவு என்பதும், அந்த நிதியானது தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த, மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, நலப்பணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி உள்ளிட்ட நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
 
திரையுலகில் நிறைய வேலை உள்ளது என்றும் அதில் முறையான கவனத்தை செலுத்துங்கள் என்றும் இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 
மேலும் விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என தெரிவித்துள்ள அவர், இதற்கு முன் திரைப்படங்களை தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் ‘தயாரிப்பாளர்கள்’ என சொல்லிக் கொள்பவர்களே,  முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள் என்று சவால் விடுத்துள்ளார். ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி யோசியுங்கள் என நடிகர் விஷால் குறிப்பிட்டுள்ளார்.