7 ஃபிலிம்பேர் விருதுகளை அள்ளிய சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம்!
சித்தார்த் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதன் பின்னர் பிற மொழிகளிலும் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட சித்தார்த்துக்கு சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸாக சித்தா படம் அமைந்தது.
இந்த படம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து பேசியதும், அதனை ஆணாதிக்க மனப்பான்மையில் எதிர்கொள்ளும் கதாநாயகனுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் பற்றி கதாநாயகி எடுத்துரைப்பதும் படத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றது.
பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்ற சித்தா திரைப்படம் இப்போது பிலிம்பேர் விருதுகள் நிகழ்வில் 7 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (விமர்சகர்கள்), சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த பின்னணி பாடகி மற்றும் சிறந்த இசை ஆல்பம் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.