தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் தயாராகி வரும் நிலையில் தமிழ் சினிமா வட்டாரத்தை ஒழுங்குப்படுத்தும் முயற்சியில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் கடிதம் ஒன்றை தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்கள் தொடங்கி பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படம் வரை வாரம்தோறும் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. திரையரங்குகளில் வெளியாகும் இந்த படங்கள் மட்டுமல்லாமல் தொடங்கி முடிக்க முடியாமல் கிடப்பில் கிடக்கும் படங்கள், முழுதாக முடித்தும் பைனான்ஸ் பிரச்சினையால் ரிலீஸ் ஆகாத படங்கள் என ஒரு பெரும் லிஸ்ட்டே இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சரியான ஒழுங்குமுறை இல்லாததால் வாரம்தோறும் வெளியாகும் படங்களை நிர்வகிப்பதிலும் சிக்கல்கள் உள்ளது. இதனால் ஒரே வாரத்தில் பல படங்கள் ரிலீஸ் ஆகி ஓடாமல் போவதும், சில வாரங்களில் படமே ரிலீஸ் ஆகாமல் இருப்பதும் கூட நடக்கிறது.
இந்நிலையில்தான் இந்த குழப்பங்களை சரிசெய்ய அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் திரைப்படம் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள், புதிதாக தொடங்குபவர்கள், பாதி முடித்தவர்கள், முடிக்கும் தருவாயில் இருப்பவர்கள் என அனைவரும் தங்கள் தற்போதைய சூழலை கடிதம் மூலம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அதில், திரைப்படங்கள் வெளியீட்டில் உள்ள சிரமங்கள் கலையவும், சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்க வழி செய்யவும், சினிமா வியாபாத்தில் வரவு குறைந்து செலவு அதிகரித்திருப்பதை ஒழுங்கு படுத்தவும், தேங்கி நிற்கும் திரைப்படங்களை வெளியீடு செய்து வருமானத்திற்கு வழி செய்யவும், இனிவரும் காலங்களில் படமெடுப்பவர்களுக்கு நஷ்டமில்லாத சூழ்நிலையை உருவாக்கவும், நடிகர்கள், தொழிலாளர்கள், அனைவருக்கும் தொழில் பாதுகாப்பு வழங்கவும், திரைத்துறையில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டி இருப்பதால் திரைப்பட முதலாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இப்படியாக பட வெளியீடுகளை சரியாக ஒருங்கிணைப்பதன் மூலம் அனைத்து படங்களுக்கும் குறைந்த பட்ச வரவேற்பு, வசூலை உறுதி செய்யமுடியும் என நம்பப்படுகிறது.
Edit by Prasanth.K