தனுஷின் 'அசுரன்' படத்தில் இணைந்த 'ராட்சசன்' நடிகை

Last Modified திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (20:11 IST)
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தின் பணிகள் மின்னல் வேகத்தில் இரவுபகலாக நடைபெற்று வருகிறது
எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது அபிராமி என்ற நடிகை இணைந்துள்ளார். இவர் விஷ்ணுவிஷால் நடித்த ராட்சசன்' திரைப்படத்தில் முனிஷ்காந்த் மகள் அம்மு என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அபிராமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்ததோடு வெற்றிமாறனுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :