தயாரிப்பாளர் மட்டும்தான் அனாதையா? – பிகில் தயாரிப்பாளரின் உருக வைக்கும் பதிவு!
ஒரு பட உருவாக்கத்தில் எல்லாரையும் கண்டுக்கொள்ளும் மக்கள் தயாரிப்பாளர்களை மட்டும் கண்டுக்கொள்வதில்லை என்ற ரீதியில் பிகில் தயாரிப்பாளர் ட்விட்டரில் மனதை உருக வைக்கும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மூன்றாவது படம் ‘பிகில்’. இந்த படத்தின் போஸ்டர் வெளியானது முதல் ட்ரெய்லர் வெளியானது வரை ரசிகர்கள் அனைத்தையும் கொண்டாடி தீர்த்தனர். யூட்யூபில் பாடல்கள் பட்டையை கிளப்பின. ரசிகர்கள் அட்லீ, விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் என இந்த படத்தில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவரையும் பாராட்டினார்கள். ஆனால் அந்த பாராட்டு பத்திர வரிசையில் தன் பெயர் இடம் பெறாததில் சோகத்தில் இருக்கிறார் போல படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
தற்போது பிகில் ரிலீஸுக்காக உலகமே காத்திருக்கும் நிலையில் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் “ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியாகும் பிகில் படத்தை அனைவரும் பாராட்டியதில் மகிழ்ச்சி. ஆனால் நான் எல்லா நேர்காணல்களிலும் சொன்னது போல தயாரிப்பாளர்கள் எப்போதுமே பெயரற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரசிகர்கள் சிலர் “ வருத்தப்படாதீங்க அக்கா.. நீங்களும் எங்களுக்கு முக்கியம்தான்.. உங்களாளதான் இன்னைக்கு பிகில் உருவாகியிருக்கு” என்று ஆறுதல் கூறியுள்ளனர்.