என் மகளைக் காணவில்லை… மீரா மிதுன் தாயார் போலீஸில் புகார்!
நடிகை மீரா மிதுனைக் காணவில்லை என அவரது தாயார் ஷ்யாமளா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்த மீரா மிதுன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் அதன்பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு மீராமிதுன் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து மீராமிதுன் தலைமறைவானார்.
அதை தொடர்ந்து மீராமிதுனை போலீஸார் சேத்துப்பட்டு மற்றும் வேளச்சேரியில் தேடினர். அங்கு கிடைக்காத நிலையில் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கும் தேடியுள்ளனர். ஆனால் அங்கும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கைது வாரண்ட் பிறப்பித்து 2 மாதங்களாகிவிட்ட நிலையிலும் காவல்துறை சரியாக கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து மீரா மிதுனை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்போது மீரா மிதுனின் தாயார ஷ்யாமளா தனது மகளைக் காணவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவரைக் கண்டுபிடித்து தரவேண்டுமெனவும் கூறியுள்ளார்.