1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 ஏப்ரல் 2025 (09:29 IST)

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி உள்ளதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ’Valiant’ எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனி குறித்து தகவல் வெளியானதும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடம் இருந்து ஆரவாரமாக வாழ்த்துகள் குவிந்தன. பல அரசியல் தலைவர்கள் நேரை சந்தித்து வாழ்த்தினர். மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றினார். இதையடுத்து அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஜபார்வை படத்துக்காக இசையமைத்த ஒரு சுவாரஸ்யமான சூழலை விளக்கியுள்ளார். அதில் “அந்த படத்துக்கு மறுநாள் பூஜை. ஆனால் கதை இன்னும் தயாராகவில்லை. இயக்குனர் டூயட் ஒன்று போட்டுக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டார். அப்படிக் கதையும் தெரியாமல், பாடலின் சூழலும் தெரியாமல் நான் ட்யூன் போட்டேன். அதற்குக் கவிஞர் கண்ணதாசன் ‘அழகே அழகே’ என்ற பாடலை எழுதினார். இப்படிப் பல பாடல்களை நான் ட்யூன் போட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.