இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!
தமிழக அரசின் சார்பில் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2-ஆம் தேதியை ஒட்டி சிறப்பு பாராட்டு விழா நடத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இளையராஜா, மேற்கத்திய மற்றும் கர்நாடக இசையை இணைத்து உருவாக்கிய வேலியண்ட் பாரம்பரிய சிம்பொனி நிகழ்ச்சி, கடந்த மார்ச் 8-ஆம் தேதி லண்டன் அப்பல்லோ அரங்கில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்திய இசையின் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்த நிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
லண்டனில் இருந்து திரும்பியபோது, இசைஞானியின் இசையாத்திரையின் அரை நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2-ஆம் தேதியே இந்த சிறப்பு விழா நடைபெறும் என்று உறுதி செய்துள்ளார்.
Edited by Mahendran