வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 மே 2024 (07:20 IST)

மஞ்சும்மள் பாய்ஸ் படக்குழுவினருக்கு இளையராஜா நோட்டீஸ்!

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சக்கை போடு போட்டு 200  கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது மும்பையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப் பட்டு வருகிறது. அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை மஞ்ஞும்மள் பாய்ஸ் நிகழ்த்தியுள்ளது.  தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு படத்தில் ஒரு முக்கியமான இடத்தில் இளையராஜாவின் கண்மணி அன்போடு காதலன்  எழுதும் கடிதம் பாடலை பயன்படுத்தியது காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படக்குழுவினருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன்னுடைய பாடலை அனுமதியின்றி படக்குழு பயன்படுத்தியுள்ளதாகவும், அதை உடனடியாக நீக்கவேண்டும் எனவும் இளையராஜா நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் பாடலை பயன்படுத்தியதற்கான இழப்பீடை வழங்கவேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.