நான் என்ன காந்தியா? புத்தரா? நான் செத்துட்டா யாரும் ஞாபகம் வெச்சுக்கமாட்டாங்க! – நடிகர் மமுட்டி!
பிரபலங்கள் இறந்தபிறகு அவர்களை நினைவு கூர்வது குறித்த கேள்விக்கு மலையாள நடிகர் மமுட்டி சொன்ன பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அதேசமயம் சிந்திக்கவும் வைத்துள்ளது.
மலையால சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக அறியப்படுபவர் மமுட்டி. இவருக்கு மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் கமல்ஹாசனை போல மலையாளத்தில் புதுமையான பல கதாப்பாத்திரங்களில் நடிக்க கூடியவர் மமுட்டி. சமீபத்தில் இவர் நடித்து வெளியான மாலை நேரத்து மயக்கம், பிரமயுகம் படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
ஒரு நடிகனை தாண்டி தான் வேறு எதுவுமில்லை என்ற மனப்போக்கு கொண்டவர் மமுட்டி. பல நேர்க்காணல்களில் கேள்வி கேட்கும் ஆங்கர்களையே கிண்டல் செய்து குழப்பிவிட்டு விடுவார். சமீபத்தில் அதுபோல ஒரு நேர்காணலில் மமுட்டியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது “காலத்தால் நீங்கள் எப்படி நினைவுக்கூரப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதில் அளித்த மமுட்டி “இந்த உலகம் எத்தனையோ மகத்தான மனிதர்களை பார்த்திருக்கிறது. அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இன்றும் மக்களால் நினைவுக்கூரப்படுகின்றனர். இந்த உலகம் என்னை எத்தனை காலம் நினைவில் வைத்துக் கொள்ளும் என நினைக்கிறீர்கள். 10 ஆண்டுகள் அல்லது 50 வருடங்கள் என்னை நினைவில் வைத்துக் கொள்ளுமா?
ஆயிரக்கணக்கான நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். என்னை எப்படி இந்த உலகம் நினைவில் வைத்துக் கொள்ளும்? உலகத்தை விட்டு சென்ற சில ஆண்டுகள் மட்டுமே நினைவுக் கூறப்படுவார்கள். அதன்பின்னர் காலத்தால் எல்லாரும் மறக்கடிக்கப்படுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இந்த உலகம் என்னை காலத்திற்கும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K