1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 நவம்பர் 2018 (19:47 IST)

கஜா புயல்: தமிழக மக்களுக்கு என்ன செய்தார்கள் திரையுலகினர் !

கஜா:
 
வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்த போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உருக்குலையச் செய்துள்ளது.
 

ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். சுனாமியை அடுத்து தமிழகத்தை அதிகமாக பாதித்த இயற்கை பேரிடராக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர்.
 
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து , தலைமுறை தலைமுறையாக சேர்த்து வைத்த தென்னை, வாழை, கரும்பு,  ஆடு, மாடு, வீடு என ஒட்டுமொத்த சொத்துக்களை முற்றிலும் அழித்துள்ளது. 
 
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்களும், பிரபலங்களும் மாற்றி மாற்றி உதவிகள் செய்த வண்ணம் உள்ளனர். ரஜினி, விஜய் , சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், வைரமுத்து என தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களின் ரசிகர் மன்றங்களின் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர் .
 
அந்த வகையில் பிரபலங்களின் உதவியை தொடர்ச்சியாக பார்ப்போம் 
 
ரஜினி:
 
 
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு 50 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க தமது மன்றத்தினருக்கு, நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில், சமூக வலைத்தளத்தில், வெளியிடப்பட்டுள்ள பதிவில், பாதி​க்கப்பட்டவர்ளுக்கு, உடனடியாக உதவிட நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
விஜய்சேதுபதி:
 
 
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  ரூ. 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது , ''கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவதுமாக மின்சாரம் கிடைக்க பத்து நாட்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் ''சார்ஜிங் டார்ச் லைட்'' ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும். 
 
மேலும் தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்'' என விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
 
விஜய்: 
 
 
கடலூர் மாவட்ட தளபதி தலைமை விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சீனுவின் வங்கி கணக்கிற்கு மட்டும்  விஜய் ரூ. 4.5 லட்சம் அனுப்பி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்குமாறு விஜய் தெரிவித்ததாக சீனு தனது டுவிட்டரில் பதிவிட்டு தெரிவித்தார்.
 
சூர்யா:
 
 
கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 நிதியுதவி அளித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு முதன் முதலாக முன்வந்து உதவியது சிவகுமார் குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சிவகார்த்திகேயன்: 
 
 
நடிகர் சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். அதில் 10 லட்ச ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தனது ரசிகர்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார். 
 
லைக்கா நிறுவனம்:
 
 
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் லைகா பட நிறுவனம் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளது . ரஜினி நடிக்கும் '2.0' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்த தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
பிரபலங்களின் இந்த உதவியால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்கள் பயனடைந்துள்ளதாகவும் தங்களின் உதவிகள் எங்களுக்கு  பெரும் உதவியாக இருந்தது என நன்றி தெரிவித்துள்ளனர்.