1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (10:29 IST)

நீண்ட மன்னிப்பு பதிவில் சிலருக்கு வார்னிங் கொடுத்த துல்கர்!!

பிரபாகரன் பெயரை தனது படத்தில் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். 
 
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் தயாராகியுள்ள படம் “வரனே அவசியமுண்ட”. இந்த படத்தில் ப்ரோமோஷன் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த துல்கர் சல்மான் அதில் இடம்பெறும் வளர்ப்பு நாய்க்கு ”பிரபாகரன்” என பெயரிட்டிருப்பதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
நாய்க்கு பிரபாகரன் என பெயரிட்டிருப்பது தமிழர்களையும், அவர்களது உரிமை போரையும் இழிவுபடுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். 
 
அவர் தெரிவித்துள்ளதாவது, ’வரனே அவஸ்யமுன்ட்’ படத்திலுள்ள பிரபாகரன் நகைச்சுவைக் காட்சி தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று பலரும் என்னுடைய கவனத்துக்கு கொண்டுவந்தனர். 
 
இந்த காட்சி உள்நோக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது அல்ல. அந்த நகைச்சுவைக் காட்சி பழைய மலையாளப் படமான பட்டனா பிரவேஷம் படத்தைக் குறிப்பிடும் காட்சி. இது கேரளாவில் மிகவும் பிரபலமான மீம். 
 
பிரபாகரன் என்பது கேரளாவில் மிகவும் இயல்பான பெயர். அதனால், படத்தில் தொடக்கத்தில் போடப்பட்ட அறிவிப்பின்படி, அந்தப் பெயர் உயிருடன் உள்ள யாரை அல்லது மறைந்த யாரை குறிப்பிடப்படவில்லை. 
 
இந்தப் படத்தைப் பார்க்காமல் பலர் இதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். வெறுப்பை பரப்ப முயற்சிக்கிறார்கள். என்னை வெறுப்பதோ அல்லது என்னுடைய இயக்குநர் அனுப்பை வெறுப்பதையோ நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதை எங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
 
எங்களுடைய தந்தைகளை திட்டுவதோ அல்லது படத்தில் நடித்த மூத்த நடிகர்களைத் திட்டுவதோ வேண்டாம். அந்தக் காட்சியால் காயம்பட்ட நல்ல மற்றும் அன்பான தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.