எப்படி இருக்கு சூரரைப் போற்று? – கேப்டன் கோபிநாத்தின் விமர்சனம்
சூரரைப் போற்று திரைப்படம் தன்னை அழச் செய்ததாக கேப்டன் ஜி ஆர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக நேற்று வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறான சிம்ப்ளி ப்ளை ( தமிழில் வானமே எல்லை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேப்டன் கோபிநாத் இந்த படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று இரவுதான் படத்தைப் பார்த்தேன். சில இடங்களில் சிரித்தேன். சில குடும்பக் காட்சிகளில் என்னை மறந்து அழுதேன். என் மனைவி பார்கவி கதாபாத்திரத்தை அபர்னா பாலமுரளி மிக சிறப்பாக நடித்திருந்தார். வளரத்துடிக்கும் தொழில்முனைவோரின் கதாபாத்திரத்தை சூர்யா சிறப்பாக நடித்திருந்தார். திரைப்படம் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. என் நூலின் நோக்கத்தை படம் சரியாக பிரதிபலித்துள்ளது. சுதா கொங்கராவுக்கு சல்யூட் எனக் கூறியுள்ளார்.