80'ஸ் நட்சத்திரங்கள் ஒன்றுகூடி ஆடல் பாடலுடன் கொண்டாட்டம்
80-களில் முன்னணி நடிகர், நடிகைகளாக ஜொலித்தவர்கள் தங்களது நட்பை புதுப்பித்துக் கொள்ள, ஆண்டுதோறும் சந்தித்து வருகிறார்கள். இதன் ஒன்பதாம் ஆண்டு சந்திப்பு தற்போது நடந்துள்ளது.
சென்னை தி.நகரில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. ஒவ்வோர் வருடமும் இந்த சந்திப்புக்கான கரு ஒன்று உருவாக்கப்படும். அதற்கேற்ப நடிகர்கள் ஆடை அணிகலன் அணிந்து வருவர். இந்த ஆண்டு டெனிம் மற்றும் டைமண்ட்ஸ் (வைரங்கள்) எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
சவேரா ஹோட்டல்ஸின் நீனா ரெட்டி, சுஜாதா முந்த்ரா, நிவேதிதா ஆகியோ நிகழ்ச்சி நடந்த இடத்தை அலங்கரித்திருந்தனர். சோஃபா, பூக்கள், விரிப்புகள், ஜன்னல் சீலைகள் எல்லாமே டெனிம் துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. டெனிம் ஆடையில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன.
முதலில், நடிகர்கள் 12 பேரும் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். வெள்ளை சட்டை, ப்ளூ ஜீன்ஸ் சகிதமாகவும் சிலர் டெனிம் ஜாக்கட்டுகளுடனும் வந்து சேர்ந்தனர். ஜாக்கி ஷெராஃப் ட்ரெண்டியான டெனிம் ஜாக்கெட்டில் வந்து கவனம் ஈர்த்தார்.
பின்னர் மோகன்லால் வந்தார். இந்த நிகழ்ச்சிக்காகவே அவர் போர்ச்சுகலில் இருந்து சென்னை வந்திருக்கிறார். அவரது பிரத்யேக சட்டையின் பின்னால் 80 என எழுதப்பட்டிருந்தது.
ஜீன்ஸ், குர்தி, டிசைனர் சேலைகள் என டெனிம் ரக ஆடைகளில் அணிவகுத்தனர் பெண்கள். பூனம் திலான் மும்பையில் இருந்து அனைவருக்கும் ஒரு பரிசுப் பொருள் கொண்டு வந்திருந்தார். ஒவ்வொரு நடிகரின் புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக செல்ஃபோன் கூடு அது.
பின்னர் நடிகர்கள் அனைவரும் டம்ப் சராட்ஸ் விளையாடினார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்பட்டது. நரேஷ், சத்யராஜ், ஜெயராம் ஆகியோர் சிவாஜி கணேசனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சில நடிப்புகளை அரங்கேற்றினார். எம்.ஜி.ஆர்., கமல்ஹாசனுக்கும் மரியாதை செய்யும் வகையில் சில காட்சிகளில் நடித்தனர்.
80-களில் பலரின் கனவு நட்சத்திரங்களாக ஜொலித்தவர்களை ஒரே ஃப்ரேமில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்த படங்களுக்கு கமெண்ட் இடுகிறார்கள் ரசிகர்கள்!