மின்னல் வேகத்தில் அஜித் 59 படப்பிடிப்பு – அஜித் எப்போது ?
அஜித் 59 படத்தை இயக்கிவரும் ஹெச் வினோத் தற்போது அஜித் இல்லாதக் காட்சிகளை படமாக்கி வருவதாகவும் விரைவில் அஜித் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிப் பல வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. இதையடுத்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை மற்றும் தீரன் ஆகிய படங்களின் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காகும். இதில் அமிதாப் பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக இப்போது நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 25 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அஜித் இன்னும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அஜித் இல்லாத காட்சிகளை மட்டுமே இப்போது படமாக்கி வருகிறார் ஹெச் வினோத். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபத்தில் நடக்க இருக்கிறது. அந்தப் படப்பிடிப்பில்தான் அஜித் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
அஜித் நடிக்க இருக்கும் பகுதிகள் ஒரே வீச்சில் படமாக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்காக அஜித் மொத்தமாகவே 20 நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் அஜித் நடிக்கும் காட்சிகள் மொத்தமாக அடுத்த மாத இறுதிக்குள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகியக் காலப் படமாக உருவாக்கப்படும் இந்தப்படம் அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி ரிலிசாக இருப்பதாகக் கூறப்படுகிறது.