'கமலா'வை அடுத்து 'உதயம்' திரையரங்கிலும் 'காலா' ரிலீஸ் இல்லை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை திரையிட முடியாது என்று கமலா திரையரங்க நிர்வாகி கூறியதை சற்றுமுன் பார்த்தோம். இந்த படத்தின் விநியோகிஸ்தர் அதிக விலைக்கு டிக்கெட்டுக்களை விற்பனை செய்ய வற்புறுத்துவதாகவும், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க தாங்கள் விரும்பாததால் இந்த படத்தை வெளியிட விரும்பவில்லை என்றும் கமலா திரையரங்க நிர்வாகிகள் விளக்கம் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் கமலாவை அடுத்து முன்னணி திரையரங்க வளாகங்களில் ஒன்றான உதயம் காம்ப்ளக்ஸ் திரையரங்கிலும் 'காலா' நாளை வெளியாகவில்லை. ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களில் நாளை உதயம் திரையரங்குகளில் 'காலா'வுக்கு முன்பதிவு செய்யப்படவில்லை என்பதில் இருந்தே இது உறுதியாகிறது.
இதுகுறித்து வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் டுவிட்டரில் 'மற்ற திரையரங்குகள் ஏற்றுக்கொண்ட ஒருசில ஒப்பந்தங்களை கமலா, உதயம் திரையரங்குகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஆனால் கட்டணம் அதிகமாக வசூலிக்க வற்புறுத்துவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.