1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2019 (09:17 IST)

கஸ்தூரியின் புதுஅவதாரம்!

நிஜ வாழ்க்கையில் சமூக அநீதிகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்து வருபவர் நடிகை கஸ்தூரி. இவர் விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் மருத்துவராக நடிக்க உள்ளார்.
 
நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக அடிக்கடி குரல் எழுப்பி வருபவர். இதற்காக ஆளுங்கட்சி எதிர்க்கட்சி காவல்துறையினர் திரையுலகினர் என யாரையும் இவர் விட்டு வைக்காமல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சில விமர்சனங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கஸ்தூரி, அந்த பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரி மற்றும் காவல்துறை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். 
 
இப்போது திரையில் சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் வேடத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தில் நேர்மையான மருத்துவராக நடிக்கிறார். மருத்துவ ஊழலை வெளிக்கொண்டுவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கஸ்தூரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  தமிழரசன் படத்துக்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.