இது எங்கள் உரிமைக்கான குரல்: முதல்வரை சந்தித்த பின் நடிகர் கார்த்தி பேட்டி!
தமிழக முதல்வரை சற்றுமுன் நடிகர் கார்த்தி, நடிகை ரோகினி உள்பட திரைத்துறை பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். அதன் பின் நடிகர் கார்த்தி பேட்டியில் கூறியதாவது:
ஒளிப்பதிவு சட்டம் 2021-இல் சினிமா தொழிலாளர்களையும், சினிமா எடுப்பவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிற வகையில் சட்டத் திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. படத் திருட்டைத் தடுப்பதற்கான வலுவான சட்டங்களும் இதில் கொண்டுவந்துள்ளார்கள். ஆனால், அதைவிட முக்கியமானது, அச்சப்பட வேண்டியது சென்சார் சான்றிதழ் விவகாரம். சென்சார் சான்றிதழ் குழுவுடன் ஏதேனும் பிரச்னை இருந்தால் அதற்கு அடுத்தபடியாக ஒரு குழுவை அணுகலாம். முன்பு தீர்ப்பாயம் இருந்தது. அது 2017-இல் ரத்து செய்யப்பட்டது.
தற்போது ஒன்றிய அரசே அடுத்த முறையீட்டுத் தளமாக இருக்கப்போகிறது. சென்சார் கொடுக்கப்பட்ட படத்தை எந்தத் தருணத்திலும் அரசு தடை செய்யும் நிலைக்கு கொண்டு வருகிறார்கள். அது மிகவும் ஆபத்தானது. மேலும் இதை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்போகிறார்கள் என்பது பற்றிய ஷரத்துகளும் அதில் குறிப்பிடப்படவில்லை. இது கருத்து சுதந்திரம் மட்டுமில்லாமல் வாழ்வாதாரத்தையே பாதிக்கிறது. எனவே, தமிழக அரசின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதால் முதல்-அமைச்சரை சந்தித்து திரைத் துறையினர் பிரதிநிதிகளாக எங்களது கோரிக்கைகளை நாங்கள் வைத்துள்ளோம். முதல்-அமைச்சரும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார்.
இது எங்கள் உரிமைக்கான குரல். இந்த விவகாரத்தை இதைவிட பெரிதாக எடுத்துச் செல்வதே எங்களது இலக்கு. அனைத்து துறையும் சேர்ந்து எங்கள் உரிமைக்காக உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மக்கள் பிரதிநிதியான அரசு இந்தப் பிரச்னையை முன்னெடுக்கும்போது எங்கள் போராட்டத்துக்கு அது வலு சேர்க்கிறது. வாழ்வாதாரத்தையே பாதிக்கிறது என்பதால் அரசுகள் ஒத்துழைக்கும்” என்று அவர் கூறினார்.