செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவையான பாசிப்பருப்பு பர்பி செய்ய..!!

தேவையான பொருட்கள்:
 
பாசிப்பருப்பு - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
நெய் - 5 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 15

செய்முறை:
 
பாசிப்பருப்பு பர்பி செய்வதற்கு முதலில் 200 கிராம் பாசிப்பருப்பு எடுத்து அதனை கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கருக்கு மாற்றி விடுங்கள். இதனோடு இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 2 - 3 விசில் வரும் வரை வேகட்டும். பாசிப்பருப்பு குழைய வேகவைக்க வேண்டும். 
 
பாசிப்பருப்பு வெந்த பின் அதனை நன்றாக மசித்து வைத்து ஆற விடவும். இப்போது 15 முந்திரி பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்யுங்கள். இந்த பொடியோடு ஆறிய பாசிப்பருப்பையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து 100 கிராம் பொடித்த வெல்லம் சேர்த்து  கொள்ளுங்கள். 
 
200 கிராம் பாசிப்பருப்பிற்கு 100 கிராம் வெல்லம் சரியாக இருக்கும். கூடவே 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி எடுத்து கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் வடிகட்டிய வெல்லத் தண்ணீரை ஊற்றி, அரைத்து வைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கொள்ளலாம். 
 
இதனோடு நான்கு தேக்கரண்டி நெய், 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்றாக கிளறி கொண்டே இருங்கள். முதலில் அல்வா  பதத்திற்கு வரும். அதன் பிறகு நன்றாக கெட்டியாகி பர்பி பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும். பர்பி பதத்திற்கு வந்த பின் ஒரு தேக்கரண்டி நெய் தடவிய பாத்திரத்தில் இதனை கொட்டி, ஆறியதும் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளலாம்.