செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2020 (11:42 IST)

தனுஷ்: சமையல் கலைஞர் ஆக ஆசைப்பட்டவர் திரைக்கலைஞர் ஆன கதை

சினிமாத் துறையில் ஆல்ரவுண்டராக வலம் வந்து கொண்டிருப்பவர், நடிகர் தனுஷ். ஹாலிவுட் வரை தன்னுடைய நடிப்புத்திறமையை காட்டியிருக்கிறார். தனுஷின் 37ஆவது பிறந்தநாள் இன்று. தனுஷ் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!

'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமானபோது தனுஷின் இயற்பெயரான 'வெங்கடேஷ் பிரபு' என்கிற பெயரை மாற்ற நினைத்தார் கஸ்தூரி ராஜா. தனுஷ் என்கிற பெயரை தேர்ந்தெடுத்து தந்தையிடம் சொல்ல, அவரும் கிரீன் சிக்னல் தர அந்தப் பெயரோடு சினிமா உலகில் அறிமுகமானார்.

தன்னுடைய வாழ்க்கையில் அண்ணன் செல்வராகவனுக்கும், இயக்குநர் பாலுமகேந்திராவிற்கும் முக்கிய இடமுண்டு என்பார்.

பள்ளிக்காலங்களில் செஃப் ஆக வேண்டும் என்கிற லட்சியத்தோடு இருந்திருக்கிறார். அதற்காக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடனும் இருந்திருக்கிறார்.

நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குநராக சினிமாவில் தனுஷுக்கு பல முகங்கள் உண்டு.

ஃபுட்பால் மீது அதிக விருப்பம் கொண்டவர். வேர்ல்டு கப் போட்டிகள் ஒன்றைக் கூட தவறவிடாமல் பார்த்டுவிடுவார்.

'ராஞ்சனா' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன போது தனுஷூக்கு இந்தி பேசத் தெரியாது. ஆனால், தொடர்ந்து இந்தி கற்றுக் கொண்டு இந்திப் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

திறமையானவர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது தனுஷின் தனித்துவம்.

ஹீரோவாக நடிப்பதைவிட வில்லனாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதும் தனுஷின் கனவு.

இளையராஜாவின் தீவிர ரசிகர் தனுஷ். பயணங்களின்போது சிறந்த வழித்துணை இளையராஜா பாடல்கள் தான் என அடிக்கடி சொல்லுவார்.

தனுஷுக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த். அவர் வாழ்வில் எதிர்பாராத தருணம் எனில் தான் ரசித்த நடிகரின் மருமகனாய் அமைந்ததுதான்.

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணிக்கு தனி ரசிகர்கள் உண்டு. தனுஷூக்கு பிடித்தமான இயக்குநர்களுள் வெற்றிமாறனுக்கு என தனி இடமுண்டு.

'என்னுடைய தொடக்ககாலத்தில் எனது தோற்றத்திற்காகவும், உருவத்திற்காகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். அந்த வயதில் அதனை எப்படி அணுகுவது என்பது கூட எனக்குத் தெரியவில்லை' என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் தனுஷ்.


அதுமட்டுமில்லாமல் 'ராஞ்சனா' படத்திற்கு பிறகு, என் திரைப்படங்களில் 'Stalking' (ஒருவரின் விருப்பமின்றி அவரைப் பின்தொடர்தல்) இருக்கக்கூடாது என்பதை முடிவு செய்தேன் என்றார். தனுஷின் படங்களில் கதையின் நாயகிகளை நாயகனாக வரும் தனுஷ் நாயகிகளின் பின்னால் சென்று காதலிக்க வற்புறுத்தும் ஸ்டாக்கிங் காட்சிகள் அதிகம் இருப்பதாக அவர் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

'ஆடுகளம்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார் தனுஷ். பிலிம்பேர் உள்ளிட்ட பிற விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இவர் பிறருடன் இணைந்து தயாரித்த காக்காமுட்டை, விசாரணை ஆகிய படங்களும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன.


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து அவருக்கு சமமான வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு தனுஷை தேடி வந்தது. இவர்கள் இருவரும் 'ஷமிதாப்' எனும் இந்தி படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.

தனுஷ் இயக்கியுள்ள ப.பாண்டி படத்தின், பிளாஷ்பேக் பகுதியில் அவரே நடித்தும் உள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் கர்ணன், ஜெகமே தந்திரம் ஆகிய படங்கள் இன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.