ஊர்வசியும் நானும் இணைந்தால் கலாட்டாதான் - பிரபு பேட்டி
மழையோ, வெயிலோ, வெற்றியோ, தோல்வியோ... வருஷத்துக்கு இருபது படங்களில் நடித்துவிடுகிறார் பிரபு.
தெறி, மீன்குழம்பும் மண்பானையும், உன்னோடு கா என்று இப்போதும் கால்டஜன் படங்கள் கையில். இதில் உன்னோடு கா முழுநீள நகைச்சுவை படம். நடிப்பின் மீதான காதல் இன்னும் மிச்சமிருக்கிறது பிரபுவின் பேச்சில்.
உன்னோடு கா படத்தைப் பற்றி சொல்லுங்க...?
இதுவொரு நகைச்சுவை படம். நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு முழுநீள நகைச்சுவைப்படத்தில் நடிப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இதில் உங்க வேடம்...?
இரண்டுவித கெட்டப்புகளில் நடித்து இருக்கிறேன். கிராமத்தில் கையில் அருவாளை தூக்கிக்கொண்டு வெட்ட துரத்தும் முரடனாகவும், சென்னையில் தன் மகனின் காதலை சேர்த்து வைக்க போராடும் பாசமுள்ள தந்தையாகவும் நடித்துள்ளேன்.
ஜோடி உண்டா...?
ஊர்வசி எனக்கு மனைவியாக நடித்துள்ளார். நாங்கள் ஜோடியாக இணைந்து நடித்தாலே படத்தில் கலாட்டாதான்.
இந்தப் படத்தில் நடிக்க என்ன காரணம்?
இப்படத்தின் கதையை அபிராமி ராமநாதன் எழுதி இருக்கிறார். கதையை கேட்டவுடன் இப்படத்தில் நடிப்பது என முடிவு செய்துவிட்டேன். இது போன்ற நகைச்சுவை படம் அமைவது அரிதானது.
படம் எப்படி வந்துள்ளது?
இன்றைய காலகட்டத்தில், ஒரு படத்தை குடும்பத்தினருடன் வந்து பார்ப்பது மிக மிக அரிது. காரணம் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கதைகள் குறைந்தே வருகிறது.
இக்குறையை அபிராமி ராமநாதன் அவர்கள் ‘உன்னோடு கா’ படத்தின் மூலம் நிவர்த்தி செய்து விட்டார். அது மட்டுமின்றி நகைச்சுவையாக, நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறார்.
இயக்குனர் ஆர்.கே. பற்றி...?
என்னுடைய நடிப்பில் வெளியான படங்களில் இதுவரை 60 க்கும் மேற்ப்பட்ட புதிய இயக்குனர்கள் அறிமுகமாகியுள்ளனர்.
அந்த வரிசையில் இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே.வும் அறிமுக இயக்குனரே. இளைய தலைமுறையான இவருடனும், இவருடைய டீமுடன் இணைந்து பணிபுரிந்தது என் இளமை கால நாட்களை நினைவுபடுத்துகிறது.