திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (16:05 IST)

இதுதான் உண்மையான வெற்றி விழா - மாநாடு வெற்றி குறித்து திருப்பூர் சுப்பிரமணியம்!

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
 
இந்த நிகழ்வில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசும்போது, “இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாட வேண்டும் என தயாரிப்பாளர் முடிவு செய்தபோது, சற்று பொறுங்கள்.. 25-வது நாளில் வெற்றி விழாவை நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன். 
 
காரணம்,  இப்போது பல படங்களுக்கு இரண்டு மூன்று நாட்களிலேயே சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள். ஆனால் அது உண்மையான வெற்றி அல்ல.. தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருமே அந்தப்படத்தால் பயன்பெற்று, அவர்களும் சேர்ந்து கலந்து கொள்ளும் இதுபோன்ற வெற்றி விழாக்கள் தான் ஒரு படத்தின் உண்மையான வெற்றியை வெளிப்படுத்தும்.
 
அந்த வகையில் இந்த அனைவரையும் அழைத்து கவுரவப்படுத்திய தயாரிப்பாளருக்கு நன்றி.. அதுமட்டுமல்ல இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ஒரு பைசா பாக்கியில்லாமல் சம்பளத்தை செட்டில் பண்ணிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிஜமாகவே பாராட்டுக்குரியவர்” என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.