செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: திங்கள், 6 மார்ச் 2017 (11:44 IST)

கடந்த 10 ஆண்டுகளாக தயாரிப்பாளர்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை - விஷால் பேட்டி

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. போட்டியிடும் ஐந்து அணிகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விஷால், ஏன் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பது குறித்து பேட்டியளித்தார்.

 
சங்கத் தேர்தலில் நிற்க நிறைய தடைகள் ஏற்பட்டதே?
 
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்று நிறைய தடைகள் வந்தன. ஆனால் கோர்ட் நான்  போட்டியிடலாம் என்று தீர்ப்பு அளித்தது. அதனால் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.
 
போட்டியிடும் மற்றவர்கள்...?
 
எங்கள் அணி சர்பில் சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு நானும், துணை தலைவர்கள் பதவிக்கு பிரகாஷ்ராஜ், கௌதம் மேனனும், செயலாளர்கள் பதவிக்கு மிஷ்கின், ஞானவேல்ராஜாவும், பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர்.பிரபுவும்  போட்டியிடுகின்றனர்.
 
தலைவர் பதவிக்கு போட்டியிட என்ன காரணம்?
 
தயாரிப்பாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்த நல்ல விஷயங்களும் நடக்கவில்லை. அவர்களுக்கு நல்லது செய்யவே நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் சினிமா தொழில் சிறப்பாக இருக்கும்?
 
நடிகர் சங்கம் என்னானது?
 
நடிகர் சங்கத்தின் பொறுப்புக்கு வந்து வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்கிறோம். அடுத்த மாதம் நடிகர்  சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டவிருக்கிறோம்.
 
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என்ன திட்டம்...?
 
நடிகர் சங்கத்தைப் போல தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் ஒரு வருடத்துக்குள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.  அப்படி நிறைவேற்றாவிட்டால் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுவோம்.
 
என்னென்ன வாக்குறுதிகள்?
 
தேர்தலில் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் வீட்டுமனைகள் வழங்கப்படும். திருட்டு டிவிடியை ஒழிப்போம்.  சிறு படங்கள் தடையில்லாமல் திரைக்கு கொண்டுவரப்படும். 60 வயதுக்கு அதிகமான தயாரிப்பாளர்களுக்கு மாதம் பத்தாயிரம் பென்சன் வழங்கப்படும். தீபாவளி, பொங்கல் பரிசுகள் ரொக்கமாக வழங்கப்படும். திரைப்படங்களுக்கு சேட்டிலைட் உரிமை  பெற்றுத் தரப்படும்.