படிக்கும் போதே காதலித்தேன் - நதியா பேட்டி
நதியா 100, 200 படங்களில் எல்லாம் நடிக்கவில்லை. நாற்பதுக்கும் குறைவான படங்கள். திருமணமாகி குழந்தைகள் பிறந்தபின் நடித்த படங்களையும் சேர்த்தால் எண்ணிக்கை 40 வருகிறது.
தனது காதல், திருமணம் குறித்து குறைவாகவே பேசும் அவரது பேட்டி உங்களுக்காக.
நீங்கள் சினிமாவில் நுழைந்தது எப்போது?
நான் 1984–ம் ஆண்டு சினிமாவில் நுழைந்தேன். அப்போது எனக்கு வயது 18. முதலில் ‘நோக்கேத்த தூரத்து கண்ணும் நட்டு’ என்ற மலையாள படத்தில் நடித்தேன்.
உங்களுடைய காதல் திருமணம் பற்றி சொல்லுங்க?
நான் மும்பையில் படித்துக் கொண்டிருந்த போது எனக்கும் ஷரிஸ்சுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் காதல் வயப்பட்டோம். நான் முஸ்லிம். அவர் மராட்டிய பிராமணர். மதத்தை பொருட்படுத்தாமல் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டனர்.
திருமணம் செய்யாமல் நடிப்பில் கவனம் செலுத்தியது ஏன்?
அவர் வெளிநாட்டில் சென்று நல்லா சம்பாதித்த பிறகு திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அப்போது தான் எங்கள் குடும்ப நண்பரான பாசில் என்னை சினிமாவில் நடிக்க அழைத்தார். திருமணம் தள்ளிப்போனதால் அதுவரை சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
உங்கள் திருமணம் எப்போது நடந்தது?
சினிமாவில் 5 வருடம் நடித்த பிறகு ஷரிசை திருமணம் செய்து கொண்டேன்.
சினிமாவில் பீக்கில் இருந்த போது திருமணம் செய்தது எப்படியிருந்தது?
சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த போது நான் திருமணம் செய்து கொண்டது எனது புத்திசாலித்தனமான முடிவு.
உங்களின் நிஜப் பெயரே நதியாதானா?
எனது இயற்பெயர் ஜரீனா. சினிமாவுக்காக பாசில்தான் எனக்கு நதியா என்று பெயர் சூட்டினார். நான் நதி போல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பெயரை தேர்ந்தெடுத்துள்ளார். ‘பூவே பூச்சுடவா’ படத்தின் எனது கதாபாத்திரத்தின் பெயர் சுந்தரி. அந்த பெயரால் இன்னும் தமிழ்நாட்டில் என்னை பலர் அழைக்கிறார்கள்.
உங்கள் குடும்பம்...?
எங்களுக்கு ஜானா, சனம் ஆகிய மகள்கள் உள்ளனர். குடும்ப வாழ்க்கை எல்லோருக்கும் நன்றாக அமைய வேண்டும். அது எனக்கு நன்றாக அமைந்தது. நான் நடிகை என்பதை விட குடும்ப தலைவியாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன்.
மீண்டும் நடிக்க வந்தது...?
எனது மகள்கள் இப்போது அவர்களை அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். இதனால் சினிமாவில் 2004–ம் ஆண்டு ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் மறுஅறிமுகம் ஆனேன். நாங்கள் வெளிநாடுகளில் வசித்து விட்டு ஒரு தடவை மும்பை வந்த போது ஜெயம் ராஜா என்னை அணுகி சினிமாவில் நடிக்குமாறு கேட்டார். அதனால் மீண்டும் மறுஅறிமுகம் ஆனேன். வருடத்துக்கு ஓரிரு நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன்.