வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 17 மார்ச் 2018 (16:07 IST)

இன்னமும் மவுசு குறையாத தெரு கிரிக்கெட் -உங்கள் தெருவின் 'கிரிக்கெட் ஹீரோ' யார்?

தமிழகத்தில் சிறுவர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது ஸ்ட்ரீட் கிரிக்கெட்.



இடம், சூழ்நிலை, ஆட்கள் ஆகியோரை பொறுத்து அதற்கேற்ப விதிகளை மாற்றிக்கொண்டு கிரிக்கெட் விளையாடுவது இவர்களின் வழக்கம். பம்பரம் விடுதல், கபடி போன்ற பல விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட் இங்கே தனிச்சிறப்பை பெற்றிருக்கிறது. நகரம், கிராமம் வித்தியாசமின்றி வயது பேதமின்றி பல்வேறு இடங்களில் வெவ்வேறு விதிகளை உருவாக்கிக்கொண்டு கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.

மடிக்கணினியில் கேம் விளையாடுவது, திறன்பேசியில் கேம் விளையாடுவது போன்றவை அதிகரித்து வந்தாலும் கடுமையான வெயில் இருந்தாலும் கூட தெருவிலோ அருகிலுள்ள ஒழுங்கற்ற அல்லது ஒழுங்கமைவான மைதானத்திலோ நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவதை நவீன உலகிலும் இவர்கள் விரும்புகிறார்கள்.

சர்வதேச அளவில் விளையாடப்படும் கிரிக்கெட்டுக்கும் தெருக்களில் விளையாடும் கிரிக்கெட்டுக்கும் விதிகளை பொறுத்தவரையில் மலையளவில் வேறுபாடு உண்டு.

ஓடி வந்து பௌலிங் போடக்கூடாது, குறிப்பிட்ட தூரத்தை தாண்டி பந்தை விளாச கூடாது; ஆஃப் சைடு அடித்தால் மட்டுமே ரன்கள் கணக்கில் வரும், ஒன் பிட்ச் கேட்ச் பிடித்தால் அவுட், அதிவேகமாக பந்து வீசக்கூடாது என பல்வேறு விதிகள் இங்கே உண்டு.

இதுதான் விதி, இப்படித்தான் விளையாடவேண்டும் என்ற எந்த நெறிமுறையும் இல்லாததால்தான் சூழ்நிலைக்கேற்ப விதிகளை உண்டாக்கிக்கொண்டு மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள். பெரு நகரங்களில் தெருக்களில் கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலை இருப்பின் சற்று வெட்டவெளியாக காலியாக அருகில் ஏதேனும் இடம் இருந்தால் கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறார்கள்.

இவர்களுக்கு கிரிக்கெட் விளையாட ஸ்டம்ப் வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஒரு சுவர்; ஒரு கல்; ஒரு மரம்; ஒரு மரத்துண்டு என எதுவும் போதுமானது . தரமான மட்டை வேண்டுமென்ற அவசியமில்லை தென்னை மட்டையில் கூட விளையாடுகிறார்கள். சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை ஆத்மார்த்தமாக நேசித்து விளையாடுபவர்களுக்காக விரைவில் பிபிசி தமிழ் ஒரு அறிவிப்பை வெளியிடவுள்ளது. பிபிசி தமிழ்.காமுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.