1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (10:40 IST)

உயரிய விருதுகளை நாடாளுமன்ற பாதையில் வைத்து சென்ற வினேஷ் போகத்!

Vinesh Bhogat
மல்யுத்த சம்மௌனத்தின் சமீபத்திய தலைவர் தேர்வு குறித்து வீரர்கள், வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தனது விருதுகளை நாடாளுமன்ற பாதையில் வைத்து சென்றுள்ளார் வீராங்கனை வினேஷ் போகத்.



இந்திய மல்யுத்த சம்மௌனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி அவர்கள் கடந்த சில மாதங்களாக டெல்லியில் நடத்தி வந்த போராட்டம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரிஜ் பூஷண் பதவி விலகிய பின் தற்போது மல்யுத்த சம்மௌனத்தின் தலைவராக அவரது நெருங்கிய உறவினரான சஜ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது மல்யுத்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடையே பெரும் கண்டன அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து மல்யுத்தத்தில் இருந்து விடைபெறுவதாக அறிவித்த சாக்‌ஷி மாலிக் தனது ஷூக்களை மீடியா முன் மேசையில் வைத்தார்.

அதை தொடர்ந்து பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில் தற்போது தேர்வு செய்யப்பட்ட மல்யுத்த சம்மௌனம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இதுகுறித்து நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில் மல்யுத்த போட்டிகள் பலவற்றில் வென்று கேல் ரத்னா, இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜூனா விருது ஆகியவற்றை பெற்ற பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது உயரிய விருதுகளை இன்று நாடாளுமன்றம் செல்லும் கடைமைப்பாதையில் வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K