அணியில் இருப்பேனா ? மாட்டேனா ? என் தலைவலி அல்ல – ஷிகார் தவன் பதில் !
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இருக்கும் ராகுல், ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் உச்ச பார்மில் இருப்பதால் அவர்களில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணி டி 20 போட்டிகளில் சுழற்சி முறையில் தொடக்க ஆட்டக்காரர்களை இறக்கி வருகிறது. ரோஹித், தவான் மற்றும் ராகுல் ஆகிய மூன்று பேருமே சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் அடுத்து வரும் நியுசிலாந்து அணிக்கெதிரான தொடர் மற்றும் உலகக்கோப்பைக்கான டி 20 தொடர் ஆகியவற்றில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி சமீபத்தில் பேசிய ஷிகார் தவான் ‘ நாங்கள் மூவரும் டாப் ஆர்டரில் பிரமாதமாக ஆடி வருகிறோம். ரோஹித்துக்கு 2019 சிறப்பாக அமைந்தது. கடந்த சில தொடர்களாக ராகுல் நன்றாக விளையாடுகிறார். எனக்குக் கொடுத்த வாய்ப்பையும் நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளேன். எனவே நான் இருப்பேனா அல்லது இல்லையா என்பதெல்லாம் என் தலைவலி அல்ல. வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.