டிவில்லியர்ஸ் ஊடகங்களிடம்தான் பேசுகிறார்… எங்களிடம் பேசவில்லை –மார்க் பவுச்சர் பதில் !
தென் ஆப்பிரிக்க அணியில் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் விளையாடுவது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஏ பி டிவில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அந்நாட்டு வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவர் விலகினார் என சொல்லப்பட்டது.
ஆனால் 2019 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட அவர் முயற்சி செய்தார். ஆனால் அதற்கு வாரியம் சம்மதிக்கவில்லை. உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா மிக மோசமாக தோற்றது. அதன் பின் ஆம்லா போன்ற வீரர்களின் ஓய்வு அந்த அணியை மேலும் தொய்வடய வைத்தது. கிரீம் ஸ்மித் மற்றும் மார்க் பவுச்சர் ஆகியோர் வாரியத்தில் புதிதாகப் பொறுப்புகளை ஏற்றனர்.
அவர்கள் இப்போது டிவில்லியர்ஸை அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு நடக்கும் டி 20 உலகக்கோப்பை போட்டியில் அவர் விளையாடுவார் என தெரிகிறது. டி 20 போட்டிகள் மட்டுமில்லாமல் அவர் மீண்டும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் புதிய பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் கேட்கப்பட்ட போது ‘ டிவில்லியர்ஸ் ஊடகங்களில்தான் இது குறித்து பேசி வருகிறார். ஆனால் என்னிடம் அதுபற்றி எதுவும் பேசவில்லை. சிறந்த ஆட்டத்திறனோடு அவர் இருந்தால் கண்டிப்பாக அவருக்கு எந்தவித தடையும் இல்லை. சிறந்த அணியை 20 ஓவர் உலகக்கோப்பைக்கு அணுப்புவதுதான் எங்கள் நோக்கமாக இருந்துவருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். அணியின் இயக்குனர் ஸ்மித்தும் அவரை அணியில் சேர்க்க ஆர்வமாக உள்ளார்.