ஐபிஎல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்: கங்குலி அதிரடி!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 28 ஜனவரி 2020 (09:43 IST)
இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்துள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டி மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடக்க இருக்கிறது. போட்டியில் மாற்றங்கள் செய்வது குறித்த ஐபிஎல் நிர்வாக கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ”ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரவு ஆட்டங்களை தொடங்கும் நேரத்தை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. 8 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 7.30 மணிக்கு தொடங்கலாம் என பேசப்பட்டது. சரியான முடிவு எட்டப்படாததால் 8 மணிக்கு தொடங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

போட்டியின் போது பவுலர்கள் வீசும் பந்தால் பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட்டில் தாக்கி தலை அதிர்வு ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை விளையாட செய்யும் புதிய விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல நோ-பாலை ஆடுகள நடுவர் முடிவு செய்வதற்கு பதிலாக 3வது நடுவர் முடிவு செய்யும் புதிய விதிமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :