பிரதமர் மோடியுடன் இந்திய ஒலிம்பிக் வீரர்கள் சந்திப்பு.! மோடிக்கு துப்பாக்கி பரிசளித்த மனு பாக்கர்..!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு தெரிவித்தார்.
நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் பிரான்ஸ் தலைகர் பாரீசில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
பாரீஸ் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் சரப்ஜோத் சிங் மற்றும் மனு பாக்கர் பிரதமர் மோடியை சந்தித்து தங்களது பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து இருவரும் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சியை பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக கொடுத்தனர்.
பாரீஸ் ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்ததில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் அமன் ஷெராவத் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது வீரர்கள் பிரதமருக்கு பல பரிசுகளை வழங்கினர். இந்திய ஹாக்கி அணியின் ஹர்மன்பிரீத் சிங் பிரதமர் மோடிக்கு ஹாக்கி மட்டையை பரிசளித்தார்.
பாரிசில் இம்முறை இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் பிரதமருக்கு துப்பாக்கியை பரிசளித்தார். பரிசளித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.