’செத்துவிடுவேன் என்று நினைத்தேன்’ - ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனை கண்ணீர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (14:57 IST)
ரியோ ஒலிம்பிக் 2016 போட்டியின்போது இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை என்று இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
 
 
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் பிரிவில் பங்கேற்றவர் ஜெய்ஷா. 157 வீராங்கனைகள் பங்குகொண்ட இந்த மாராத்தான் போட்டியில் 89ஆவது இடம்பிடித்தார். தற்போது இந்தியா திரும்பியுள்ள ஜெய்ஷா இந்திய அதிகாரிகளை கடுமையாக சாடி உள்ளார்.
 
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு, ஜெய்ஷா அளித்துள்ள பேட்டியில், “அங்கு ஒரே வெப்பமாக இருந்தது. போட்டி காலை 9 மணிக்கு தொடங்கியது. நான் வெயிலின் உஷ்ணத்தில் ஓடினேன். எங்களுக்கு குடிநீர் இல்லை. சக்தியை மீட்க பானங்களோ, உணவுகளோ இல்லை.
 
மாராத்தான் போட்டியின்போது பொதுவாக தண்ணீர் 8 கிலோ மீட்டருக்கு அடுத்து வழங்கப்படும், ஆனால் அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தண்ணீர் தேவைப்படும். பந்தயத்தின் போது பிற நாட்டு வீராங்கனைகளுக்கு வழியில் உணவுகள் கூட வழங்கப்பட்டது.
 

 
ஆனால், எனக்கு எதுவும் வழங்கப்படவில்லை. போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு அவர்களது நாட்டு அதிகாரிகள் ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் தொலைவில் மேஜை அமைத்து அவர்களுக்கு திரவ உணவுகளை வழங்கினர்.
 
ஒலிம்பிக் கவுன்சில் வைத்திருந்த உணவு மையங்கள் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது, அதனை நான் நம்பியிருந்தேன். போட்டி முடிவடைந்ததும் என்னுடைய உடலில் எந்த திறனும் இல்லை என்பதை உணர முடிந்தது.
 
மற்ற நாட்டு வீரர்களிடம் இருந்தும் தண்ணீர் பெற முடியவில்லை. நான் இந்திய நிர்வாகத்தினரை பார்த்தேன். ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை. எனக்கு நிறைய பிரச்சனை இருந்தது. நான் பந்தயத்திற்குப் பின் மயங்கி விழுந்தேன்.
 
எனக்கு குளுக்கோஸ் வழங்கப்பட்டபோது நான் இறந்துவிடுவேன் என்று நினைத்திருந்தேன். இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை போன்றது” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :