காயங்களும் சர்ச்சைகளும் உதவின – ஆட்டநாயகன் ஹர்திக் பாண்ட்யா !
நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
12 ஆவது ஐபிஎல் தொடரின் 15 ஆவது மேட்ச் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சென்னை அணியை வீழ்த்தியது மும்பை அணி.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மிகவும் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அதனால் இன்னிங்ஸின் பெரும்பகுதி சென்னையின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஆனால் ஆட்டத்தின் கடைசி 2 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் ஹர்திக் பாண்ட்யா. கடைசி நேரத்தில் 8 பந்துகளில் அதிரடியாக 25 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்தினார். மும்பை அணி கடைசி 2 ஓவர்களில் மட்டும் 40 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு உதவியாக பொல்லார்டும் அதிரடியாக விளையாடினார். பேட்டிங்கில் மட்டுமல்லாது பவுலிங்கிலும் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களைக் கைப்பற்றினார் பாண்ட்யா.
வெற்றிக்கு முக்கியக்காரணியாக செயல்பட்ட பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர் ‘அணியின் வெற்றிக்குப் பங்களிப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நான் கடந்த 7 மாதங்களாக இது போன்ற ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாட வில்லை. நான் தொடர்ந்து தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தேன். சமீபகாலமாக நான் அடைந்த காயங்கள் எனக்கு மிகவும் உதவின… சர்ச்சைகள் கூட.. இந்த கடினமான காலம் மிகவும் கடினமாக இருந்தது.. கஷ்டமானக் காலங்களில் என்னுடன் கூட இருந்த அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன் சிறப்பாக விளையாடி இந்தியாவை உலகக்கோப்பையில் வெல்ல வைப்பதே எனது குறிக்கோளாக உள்ளது’ எனக் கூறினார்.