உலகக் கோப்பை… ஹர்திக் பாண்ட்யா சந்தேகம் –ஆஸி தொடரிலும் விலகல் !
இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் தனது இடத்தை வலுப்படுத்திக் கொண்டு வந்தார். அதற்கிடையில் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில சர்ச்சைகளால் பிசிசிஐ அவரைத் தற்காலிகமாக இந்திய அணியில் இருந்து நீக்கியது.
அதையடுத்து விசாரணைக்குப் பிறகு அவர் மீதானத் தடையைத் தற்காலிகமாக நீக்கியது, அதனையடுத்து நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் களமிறங்கி சிறப்பான பேட்டிங் மற்றும் மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார். அதனையடுத்து சிலப் பயிற்சிகளை ஆஸி தொடருக்காக அவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தீராத முதுகுவலிப் பிரச்சனைக் காரணமாக அவர் ஆஸி தொடரில் இருந்து நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சை முடிந்து சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூர் தேசிய அகாடமியில் உடற்பயிற்சி சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகே அவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது முடிவாகும். ஆஸி தொடரில் விளையாடும் வீரர்களே பெரும்பாலும் உலகக்கோப்பைப் போட்டிகளில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு ஆஸி தொடருக்கு அடுத்த சர்வதேசப் போட்டிகள் எதுவும் இல்லாததால் ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பைப் போட்டிகளில் கலந்து கொள்வதில் புதிய் சிக்கல் உருவாகியுள்ளது.
நீக்கப்பட்டுள்ள பாண்ட்யாவுக்குப் பதிலாக ஒருநாள் போட்டித் தொடரில் ரவிந்தர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் டி 20 –யில் பாண்ட்யாவுக்குப் பதில் மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை.