உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில் அதிர்ச்சி தோல்வி, அரையிறுதியில் பெல்ஜியம்
உலகக்கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட பிரேசில் அணி நேற்றை காலிறுதி போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது.
நேற்று நடந்த காலிறுதி போட்டியில் பெல்ஜியம், பிரேசியல் அணிகள் மோதின. ஆரம்பத்தில் இருந்தே ஆட்டம் பெல்ஜியம் பக்கமே இருந்தது. அந்த அணியின் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர்.
ஆட்டம் தொடங்கிய 13வது நிமிடத்திலேயே பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா அபாரமாக ஒரு கோல் போட்டார். பின்னர் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்ததால் அந்த அணி 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் பாதியில் பிரேசில் வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
இருப்பினும் ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார். ஆனால் அதன் பின்னர் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.
காலிறுதியில் வெற்றி பெற்ற பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் வரும் 10ஆம் தேதி அரையிறுதியில் மோதும். மேலும் இன்று ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகளும், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து அணிகளும் காலிறுதியில் மோதவுள்ளன.