செவ்வாய், 4 அக்டோபர் 2022
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. கட்டுரைகள்
Written By அ.லெனின் அகத்தியநாடன்
Last Updated: புதன், 2 மார்ச் 2016 (17:09 IST)

கண்ணோட்டம் : பாகிஸ்தானை இறுதிப்போட்டியில் வீழ்த்தி முதல் டி 20 கோப்பையை கைப்பற்றிய இந்தியா

கண்ணோட்டம் : பாகிஸ்தானை இறுதிப்போட்டியில் வீழ்த்தி முதல் டி 20 கோப்பையை கைப்பற்றிய இந்தியா

கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் முதல் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. 12 அணிகள் நான்கு குழுவாக பிரிக்கப்பட்டது.
 

 
’ஏ’ பிரிவில் தென்னாபிரிக்கா, வங்காளதேசம், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் இடம் பெற்றன.
 
’பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றன.
 
’சி’ பிரிவில் இலங்கை, நியூசிலாந்து, கென்யா ஆகிய அணிகள் இடம்பெற்றன.
 
‘டி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றன.
 
இந்தியா தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்துடன் மோதவிருந்தது. ஆனால், மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.
 
பாகிஸ்தான் உடனான இரண்டாவது போட்டியில் இந்திய அணி பவுல் அவுட் [Bowl Out] முறையில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக ராபின் உத்தப்பா 39 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
 
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கல் முடிவில் 141 ரன்கள் எடுக்க ஆட்டம் டையில் முடிவடைந்தது. அதிகப்பட்சமாக மிஸ்பா உல்-ஹக் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
 
பின்னர், தலா மூன்று பந்துகள் கொடுக்கப்பட்டது. அதில் 3 பந்துகளிலுமே இந்திய பந்து வீச்சாளர்கள் ஸ்டெம்பை வீழ்த்தினர். ஆனால், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மூன்று பந்தை வீணடித்தனர். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்று சூப்பர்-8 சுற்றுக்குள் நுழைந்தது.
 
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும், இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்திலும், தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.
 
நாக் அவுட் சுற்றில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. யுவராஜ் சிங் 30 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார்.
 
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
 
இறுதிப்போட்டியில், மீண்டும் பாகிஸ்தானை சந்தித்தது இந்திய அணி. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் குவித்தது. கவுதம் கம்பிர் 54 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார்.
 
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் எடுக்க 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மிஸ்பா உல்-ஹக் ஒரு சிக்ஸர் அடித்து மிரட்டினாலும் அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேற கோப்பை இந்தியா அணி கைப்பற்றியது.