வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. கட்டுரைகள்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (17:00 IST)

11 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்- 2007 T20 உலக்கோப்பை

இந்தியா இருபது ஓவர் உலகக்கோப்பையை வென்று இன்றோடு பதினோரு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

 
2007 ஆம் ஆண்டு ஐம்பது ஒவர் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய சோகத்தோடு,  இருபது ஓவர் உலகக்கோப்பைத் தொடருக்காக, மூத்த வீரர்கள் யாரும் இல்லாமல் தோனியின் தலைமையில் இளம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றிறங்கியது. 
 
கோப்பையை வென்ற இந்திய அணி அந்த தொடரில் சந்தித்த அணிகள், வெற்றிகள், தோல்விகள், சாதனைகள், திக்திக் நிமிடங்கள் எனக் கடந்து வந்த பாதை பற்றிய ஒரு சிறிய நினைவோடை.
 
முதல் லீக் போட்டியே பாகிஸ்தானோடு. பரபரப்பான அந்த போட்டியின் கடைசி பந்து வரை போராடி டிரா செய்த இந்தியா புட்பாலின் பெனால்டி கிக் போன்ற பௌல் அவுட் முறையின் மூலம் வெற்றி பெற்றது. அடுத்த லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டததால் இந்தியா அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
 
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பத்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்று அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. சேவாக் மற்றும் கம்பீர் ஜோடி நல்ல தொடக்கம் கொடுக்க அதற்கடுத்து வந்த யுவ்ராஜ் சிங் இந்த போட்டியை கிரிக்கெட் ரசிகர்களின் மறக்க முடியாத போட்டியாக மாற்றினார். போட்டியின் இடையில் இங்கிலாந்து அணியின் பிளிண்டாஃப்பின் வாய்ச்சவடலால் தூண்டப்பட்ட யுவ்ராஜ் அதற்கடுத்து ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸ்ர் பறக்க விட்டு 12 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அந்தப்போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்தது. அதற்கடுத்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் எளிதாக வென்று அரையிறுதியில் நுழைந்தது.
 
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பலமான பந்துவீச்சுக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்ப ரன்ரேட்டும் குறைந்தது. அந்த போட்டியின் முதல் பத்து ஓவர்களில் இந்திய அணியின் ரன் 60. 20 ஓவர் முடியும் போது அணியின் ஸ்கோர் 189 ஆக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக அசத்திய யுவ்ராஜ் இந்த போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் அனைத்து பவுலர்களையும் அடித்து துவைத்து 30 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். ஸ்ரீசாந்த் மற்றும் இர்பான் பதான் போன்றோரின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
 
லீக் போட்டியின் தோல்விக்கு இந்தியாவைப் பழிதீர்த்துக் கொள்ள பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டியில் காத்திருந்தது. செப் 24 அன்று நடந்த போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது. பாகிஸ்தான் அணியின் பலமான பந்து வீச்சை சமாளித்து இந்தியா 157 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் கம்பீர் 75 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியின் பௌலிங்கில் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும் பாகிஸ்தான் கடுமையாக போராடி ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தது. அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க அந்த அணியின் மிஸ்பா உல் ஹக் மட்டும் நிலைத்து நின்று போராடிக் கொண்டிருந்தார். 
 
ஒரு கட்டத்தில் அவர் அதிரடியாக விளையாட அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நெருங்கிக் கொண்டு இருந்த்தது. கடைசி ஓவரில் அந்த அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட இளம் வீரரான ஜொஹிந்தர் ஷர்மா பந்து வீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை மிஸ்பா சிக்சருக்கு அனுப்பினார். இன்னும் 4 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் வெற்றி கிட்டதட்ட பாகிஸ்தான் வசம் சென்றுவிட்டது. ஷர்மா வீசிய  மூன்றாவது பந்தை மிஸ்பா ஸ்கூப் அது வானை நோக்கி மேலே சென்றது.
 
ஒருகணம் அனைவரும் சிக்ஸரோ என்று நினைக்க பைன் லெக் திசையில் நின்ற ஸ்ரீசாந்த் பந்தை கேட்ச் பிடித்தார். கைநழுவிப் போக இருந்த கோப்பையை பிடித்துக்கொண்டு இந்திய வீரர்கள் மைதானத்தை வலம் வந்தனர். 
 
வரலாற்று சிறப்புமிக்க இந்த உலகக்கோப்பை தொடரின் போதே இந்திய அணி தன்னை மறுக்கட்டமைப்பு செய்துகொண்டது. மூத்த வீரர்கள் இல்லாமல் இளம்வீரர்களைக் கொண்டே தங்களால் கோப்பையை வெல்ல முடியும் என்று நிரூபித்தது. ரோஹித் ஷர்மா, கம்பீர் போன்றோர் அணியில் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள இத்தொடரே காரணமாக அமைந்தது. அதுவரை விளையாட்டுப் பையனாக பார்க்கப்பட்டு வந்த யுவ்ராஜ் சிறந்த மிடில் வரிசை ஆட்டக்காரராக மாறுவதற்கான விதையும் இத்தொடரில் போடப்பட்டதே. இந்திய அணியின் கேப்டன் பதவி தோனியின் கைக்கு செல்லக் காரணமும் இத்தொடெரே.