வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (14:10 IST)

சினி பாப்கார்ன் - பார்வதிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை

சினி பாப்கார்ன் - பார்வதிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை

பார்வதிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை
 
சமீபத்தில் கொச்சியில் செயின்ட் தாமஸ் கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பார்வதி, தானும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளேன் என பகிரங்கமாக கூறி அனைவரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 
 
மேலும் இந்த விழாவில் பேசிய பார்வதி குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமை, ஈவ் டீசிங் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்களுக்கு நடக்கும் தாக்குதல் அதிகமாக உள்ளது.
 
மேலும் இதுகுறித்து கூறுகையில் இதுபோன்ற நிகழ்வுகளும், நடக்கமால் பாதுகாக்க பெண்கள் தங்கள் குழந்தைகளையும், தங்களையும் பாதுகாத்து கொள்ள எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என கூறினார்.


 
 
மிஷ்கினின் பார்பர் கீதம்
 
மிஷ்கின் சவரக்கத்தி என்ற படத்தை தயாரித்து வருகிறார் அல்லவா? கதையும் திரைக்கதையும் மிஷ்கினே எழுத அவரது சகோதரர் ஆதித்யா படத்தை இயக்குகிறார். ராம் நாயகன், மிஷ்கின் வில்லன்.
 
இரு பார்பர் சகோதரர்களை பற்றிய கதை என்பதால், பார்பர்களைப் பற்றிய ஒரு பாடல் படத்தில் இடம்பெறுகிறது. சொந்த தயாரிப்பு அல்லவா. பாடலை தானே எழுதி அதனை பாடவும் செய்துள்ளார் மிஷ்கின்தங்கக் கத்தி வெள்ளிக் கத்தி என்று கத்திகளாக அடுக்கி கடைசியில் இவையெல்லாம் சவரக்கத்திக்கு ஈடாகுமா என்று போகிறது பாடல். அடுத்தவர்களை தங்களின் சவரக்கத்தியால் அழகுப்படுத்தும் பார்பர் சகோதர்களுக்கு மிஷ்கினும் அவரது சகோதரரும் இந்தப் பாடலை சமர்ப்பித்திருக்கிறார்கள்.
 
பிரதாப்போத்தனை வறுத்த அஞ்சலி மேனன்
 
கத்தி சண்டை போடுவது ஒருவகை. ஒரே வரியில் ஒருவரை அடித்து வீழ்த்துவது இரண்டாவது வகை. அஞ்சலி மேனன் இதில் இரண்டாவது வகை போலிருக்கிறது.
 
உஸ்தாத் ஹோட்டல் படத்தின் திரைக்கதையாசிரியர், மஞ்சாடிக்குரு, பெங்களூரு டேய்ஸ் படங்களின் இயக்குனர் என்று அஞ்சலி மேனனுக்கு இன்டஸ்ட்ரியில் நல்ல பெயர். பிரதாப்போத்தன் துல்கர் சல்மானை வைத்து இயக்கும் படத்துக்கு இவரைத்தான் திரைக்கதை எழுத அணுகினார். அஞ்சலி மேனன் அதற்கு சம்மதிக்க, அஞ்சலி மேனனே சம்மதித்துவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில் ஆனந்த கூத்தாடினார் பிரதாப்போத்தன். வழக்கம் போல் நாளானதும் பிரதாப்போத்தனின் சுயரூபம் வெளிவந்தது.
 
என்ன நடந்ததோ... பிரதாப்போத்தன் இயக்குவதாக இருந்த படம் ட்ராப் செய்யப்பட்டுள்ளது. இதனை முன்பே அறிந்தவர், அஞ்சலி மேனனின் திரைக்கதை சரியில்லாததால்தான் படத்தை ட்ராப் செய்ய வேண்டியிருந்தது என்று கல் வீசியுள்ளார். அதற்கு பதிலளித்த அஞ்சலி மேனன், இதுபோன்ற அவதூறுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று ஒரேவரியில் பிரதாப்போத்தனையும் அவரது குற்றச்சாட்டையும் நிராகரித்துள்ளார்.
 
அரசியலில் குதிக்க மாட்டேன்... சத்தியம் செய்த மோகன்லால்
 
கேரள முதல்வர் பினராயி விஜயனை சமீபத்தில் சந்தித்தார் மோகன்லால். அவ்வளவுதான். மோகன்லால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டியில் சேரப் போகிறார் என்று எங்கும் அமளி துமளி. ஏற்கனவே மம்முட்டியும் அந்தப் பார்ட்டியில்தான் இருக்கிறார் என்பது முக்கிய தகவல்.
 
விட்டால் கட்சியில் மெம்பராக்கி உறுப்பினர் கார்ட் வாங்கித் தருவார்கள் என்பதை உணர்ந்த மோகன்லால் உடனடியாக மறுப்பு வெளியிட்டுள்ளார்.
 
பினராயி விஜயன் என்னுடைய நண்பர். அடித்தட்டிலிருந்து கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தவர். மரியாதை நிமித்தமாகவே அவரை சந்தித்தேன். அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு அறவேயில்லை என்று கூறியுள்ளார்.
 
கேரள அரசியலில் நடிகர்கள் நுழைய முடியாமல் இருந்தது ஒருகாலம். இப்போது இன்னசென்ட், முகேஷ் என பலரும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறார்கள். அதுபோல் மோகன்லாலுக்கம் ஐடியா இருக்குமோ என்பதுதான் அனைவரது எண்ணமும். ஆனால், தனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை, ஒருபோதும் அரசியலில் இறங்க மாட்டேன் என்று சத்தியம் செய்யாத குறையாக பதிலளித்துள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்