ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அன்னையின் அருளை பெற உதவும் ஸ்ரீ சக்கர வழிபாடு !!

எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி  காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள்.

மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.
 
முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடுகின்றனர். 
 
அனைத்து விதமான சக்கரங்களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை 'ஸ்ரீசக்கர ராஜ' என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள்  குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.
 
ஶ்ரீசக்கர மத்தியில் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட பஞ்ச பரும்மாசனத்தில்  “ஸர்வானந்தமயபீடம்” என்கிற பிந்து வடிவமான மஹா பீடத்தில் காமேஸ்வரனின் இடது மடியில் அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும்,  மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்சபாணங்களையும் ஏந்தியவளாக ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுர சுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.