வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஜீவராசிகளின் செயல்களுக்கு காரணமாக உள்ள ஒன்பது கோள்கள்; எப்படி...?

ஏழு கிரகங்களோடு ராகு-கேது சேர்த்து ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர்.

நவகிரகங்கள்: சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி ஆகிய ஏழு கிரகங்களும், வாயு மண்டலத்தைக் கடந்திருக்கிற அண்டவெளியில், `பிரவஹம்’  எனும் சிறப்புக் காற்றினால், ஒன்றுக்கு மேல் அகண்ட இடைவெளியுடன் இணைந்த தனித்தனி வழித்தடங்களில் சுற்றி வருகின்றன என்கிறது சூர்ய சித்தாந்தம்.

காலம் என்பது அருவமானது; அதற்கு உருவம் அளிப்பவர்களே இந்தக் கிரகங்கள்தான். அதுமட்டுமா, கிழமைகளின் வரிசைகளை வரையறுத்ததும் இவர்கள்தான். 
 
ஞாயிற்றுக்கிழமை எனில், சூரியன் தோன்றும் வேளையில் அன்றைய தினம் சூரிய ஹோரை. அன்று முழுவதும் ஞாயிற்றுக்கிழமை. கிரக வரிசையில், சூரியனிலிருந்து 4-வதாக இருப்பது சந்திரன். ஆகவே, மறுநாள் திங்கள்கிழமை. சந்திரனிலிருந்து 4-வது, செவ்வாய்; எனவே, மறுநாள் செவ்வாய்க்கிழமை என விளக்கம் அளிக்கிறது சூர்ய சித்தாந்தம். அவர்களின் சுழற்சி, உலக இயக்கத்துக்கு உதவுவதால், அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்களாக மதிக்கப்படுகின்றனர்.
 
ஏழு கிரகங்களோடு ராகு-கேது சேர்த்து ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர். உடலுடன் நிற்காமல், உள்ளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் சிந்தனையிலும் மாற்றமுறச் செய்து, செயல்பாட்டில் ஏற்ற-இறக்கத்தையும் நிகழ்த்துகின்றனர் என்று, கிரகங்கள் குறித்து ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.
 
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள். கால புருஷனின் தேகத்தில் தலை, மேஷம்; முகம், ரிஷபம்; கழுத்து, மிதுனம் எனத் தொடங்கி கால்கள், மீனம் என முழுமையுறும். இந்த ராசிகளில் பற்றிக்கொண்டிருக்கும் கிரகங்கள், அந்தந்த உடற்கூறுகளுடன் இணைந்து, மொத்த உடலையும் பராமரிக்கின்றன.