1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சர்ப்ப தோஷங்கள் அனைத்தும் நீங்கும் அற்புத ஸ்தலம் காளாஸ்திரி !!

காளத்தியப்பர், காளத்தீஸ்வரர், வாயுலிங்கேஸ்வரர், குடுமித்தேவர், தென் கயிலைநாதர், கணநாதர், ஐங்குடுமித் தேவர், ஐந்து கொழுந்து, கல்லாலடியார், மலைமேல் மருந்து, காளத்திக் கற்பகம், பொன்முகலித் துறைவர் என்றெல்லாம் திருநாமங்கள் கொண்ட இறையனார், சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ள திருத்தலமே  காளாஸ்திரி.

காளாஸ்திரி என்று இன்று மக்கள் வழங்கினாலும், இந்தத் தலம் ஸ்ரீகாளஹஸ்தி என்பதாகும். ஸ்ரீ - சிலந்தி; காளம் - பாம்பு; ஹஸ்தி - யானை. திரேதா யுகத்தில்  சிலந்தி ஒன்று, வாயு லிங்கேஸ்வரரை பூஜித்தது. தனது வலை இழையைக் கொண்டு சிவலிங்கத்துக்கு விதானம் அமைத்துக் கோயில் கட்டியது.சிவபெருமான்,  வேண்டுமென்றே விளக்குச் சுடரைப் பெரிதாக்கி, சிலந்தியின் விதானத்தை அழியச் செய்தார். வருத்தத்தில் அமிழ்ந்த சிலந்தி, அந்த விளக்கிலேயே வீழ்ந்து மாயத்  துணிந்தது.
 
துவாபர யுகத்தின் தொடக் கத்தில் பாம்பு ஒன்று ரத்தினங்கள் கொண்டும், யானை ஒன்று இலைகள் கொண்டும் இந்தப் பெருமானை வழிபட்டன. ஒன்றுக்கொன்று  போட்டி. இரண்டும் ஒன்றையன்று தாக்கிக் கொண்டு உடல் பிறவி நீத்தன.
 
எந்தப் பிறவியாயினும், எந்த நிலைமையாயினும், அன்பு செலுத்தினால் அதை ஏற்றருளும் பரமேஸ்வரன், மூன்று ஜீவன்களையும் ஏற்று, முக்தி அருளினார். மூன்று ஜீவன்களின் உடல் ஸ்வரூபங்களையும், சிவலிங்கத் திருமேனியில் தாங்கினார். அடியில் சிலந்தி, நடுவில் யானைத் தந்தங்கள், மேலே நாகத்தின் ஐந்து தலைகள்  ஆகியன உள்ளன.
 
சந்நிதியில், மூலவருக்கு அருகில் மனோன்மணி சக்தியின் திருமேனி. கீழேயே, காளத்தீஸ்வரரின் போகத் திருமூர்த்தம். மானும் மழுவும் ஏந்தி, அபய - ஹஸ்த -  சிம்மகர்ண முத்திரைகள் தாங்கி, சுகாசனத்தில் காட்சி தருகிறார் போகமூர்த்தி.
 
காளத்தீஸ்வரர் சந்நிதியில் திரு நீற்றுப் பிரசாதம் தர மாட்டார்கள். பதிலாகத் தீர்த்தம் கிடைக்கும். பச்சைக் கற்பூரத்தைப் பன்னீரில் அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து, சங்கினால் எடுத்துப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.
 
காளத்தி, பஞ்சபூதத் தலங்களில் ஒன்று. கருவறைக்குள் கோயில் கொண்டிருக்கும் பரமனார், காற்று வடிவமாக நிறைந்திருக்கிறார். அதை வெளிப்படுத்தும் விதமாக கருவறையில் சுடர்கள் இரண்டு எப்போதும் அசைந்தாடிக் கொண்டே இருப்பது அதிசயம்.