2017 ஆண்டு திரையுலகம் சந்தித்த சர்ச்சைகள் பற்றி பார்ப்போம். ஜனவரி மாதம் துவங்கியபோதே சர்ச்சையும் கிளம்பிவிட்டது. ஜனவரி மாதம் சிக்கியது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தான்.
ஜல்லிக்கட்டு: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக இளைஞர்கள் புரட்சி செய்தபோது விஷால் பிரச்சனையில் சிக்கினார். விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசினார் என்று சர்ச்சை கிளம்பியது. இதனால் விஷால் ட்விட்டரில் இருந்து வெளியேறினார். ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கேட்ட ஆர்யாவையும் நெட்டிசன்ஸ் வறுத்தெடுத்தார்கள். பீட்டா ஆதரவாளரான த்ரிஷா, ஏமி ஜாக்சன் ஆகியோருக்கும் டோஸ் விழுந்தது.
சுசி லீக்ஸ்: நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ் ஆட்கள் தாக்கியதால் காயம் அடைந்ததாக கூறி, பாடகி சுசித்ரா தனது கையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். அதன் பிறகு திரையுலக பிரபலங்கள் சிலரின் கசமுசா புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தனுஷ்-அமலா பால் லீலை வீடியோவை வெளியிடுவதாக சுசித்ரா கூறினார். பின்னர் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி பின் வாங்கிவிட்டார். அவருக்கு மனதளவில் பிரச்சனை இருப்பதாக அவரின் கணவர் தெரிவித்தார். இதற்கிடையே சுசிலீக்ஸ் என்ற பெயரில் ஆளாளுக்கு ட்விட்டரில் கணக்கு துவங்கி பிரபலங்களின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டனர்.
மெர்சல்: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு குறித்த வசனங்கள் இருந்ததால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் செய்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பாளரை வலியுறுத்தவும் செய்தார்கள்.
பிக்பாஸ்: பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திக்காரர்கள் நடத்தலாம் ஆனால் இது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பலரும் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர். நிகழ்ச்சியை நடத்திய கமல் ஹாஸனையும் விமர்சித்தார்கள். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்தவர்கள் கூட பின்னர் விரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். விஜய் டிவியும் பிக் பாஸை வைத்து டிஆர்பியை ஏற்றியது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது.
ஜிமிக்கி கம்மல்: ஆகஸ்டு 31 தேதி வெளியான மலையாள படம் வெளிப்பாடின்டே புஸ்தகம். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டுதான் வெளிந்தது. முதலில் படம் சுமார் என்பதால் வசூல் அவ்வளவாக இல்லை. பின்னர் தமிழக இளைஞர்கள் அனைவரது வாயிலும் ஜிமிக்கி கம்மல் பாடல் முனுமுனுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் தமிழகத்தில் மீண்டும் வெளிப்பாடின்டே புஸ்தகம் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
லட்சுமி குறும்படம்: லட்சுமி ப்ரியா நடித்த லட்சுமி குறும்படம் சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. ஆண் தவறு செய்கிறான் என்றால் பதிலுக்கு பெண்ணும் அதையே செய்ய வேண்டுமா? என்ற விவாதம் எழுந்தது. லட்சுமி ப்ரியா நடித்துள்ளார் என்பதை மறந்து அவர் நிஜமாகவே செய்தது போன்று பலர் திட்டித் தீர்த்தனர் நெட்டிசன்ஸ்.
தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை: பைனான்ஸியர் அன்புச்செழியனின் கொடுமை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் அன்புச்செழியனின் அடாவடித்தனங்கள் பற்றி பலரும் பேசத் துவங்கினர்.
ஆர்.கே. நகர் விஷால்: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் விஷால். விஷாலின் வேட்புமனு ஏற்கப்படவில்லை. அவரை அரசியலுக்கு வர விடாமல் ஆரம்பத்திலேயே தட்டி வைக்க தான் இப்படி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இதனை பொன்வண்ணன், சேரன் போன்றோரும் எதிர்த்தனர்.
தீரன்: ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாகவும், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்த காவல் துறையை சார்ந்தவர்கள் பெருதும் பாராட்டினர். இதனை தொடர்ந்து மதுரவாயல் காவல் ஆய்வாளர் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த போது அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி தலைமையிலான குழுவினர் ராஜஸ்தான் விரைந்தார். அங்கு கொள்ளையர்களை பிடிக்கும் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெரிய பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
அருவி படம்: புதுமுகம் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டினர். இயக்குனருக்கு கள்ளக்காதல் இருக்கும் என்ற அளவுக்கு இறங்கி வந்து ட்வீட்டினார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதற்கிடையே அருவி அஸ்மா என்கிற அரபு மொழிப் படத்தின் காப்பி என்ற பேச்சு கிளம்பியது.