உளுத்தம் பருப்புக்காக செல்போன் டவரில் ஏறிய இளைஞன்: கைது செய்த போலீசார்!

உளுத்தம் பருப்புக்காக செல்போன் டவரில் ஏறிய இளைஞன்: கைது செய்த போலீசார்!


Caston| Last Modified சனி, 18 நவம்பர் 2017 (18:09 IST)
மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை அண்ணா சாலையில் செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
விலைவாசி உயர்வை கண்டித்து ரவிச்சந்திரன் என்ற இளைஞன் அண்ணா சாலை ஜெமினி பாலம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் குதித்தார். ஊழல், விலைவாசி உயர்வுக்காக டவர் போராட்டம் நடத்தி வருவதாக தனது கையில் கிடந்த துண்டுப்பிரசுரங்களை கீழே வீசினார்.
 
முதல்வர், துணை முதல்வர், தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். ஆளுநர் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். ரேசன் கடைகளில் 13 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த சர்க்கரையின் விலை தற்போது 25 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 10 ரூபாய் விலையில் சர்க்கரை வழங்கவேண்டும். நிறுத்தப்பட்ட உளுத்தம் பருப்பு மீண்டும் விநியோகிக்கப்பட வேண்டும்.
 
டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது. போக்குவரத்து பணிமனைகள் அடகு வைத்து வாங்கிய பணத்தை அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதியமாக அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்.
 
தகவல் கிடைத்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். டவரின் உச்சிக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக கீழே இறக்கினார்கள். பின்னர் போலீசார் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :