வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (18:55 IST)

இளைஞரின் தலையை துண்டித்த கும்பல்: சாதி பிரச்சினை காரணமா?

நெல்லையில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கருப்பந்துறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு கடந்த வருடம் திருமணமாகி 3 மாத குழந்தை ஒன்றும் உள்ளது. மணிக்கண்டன் கட்டிட வேலைகளில் கூலியாளாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்றிரவு கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தில் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது கையில் ஆயுதங்களுடன் அங்கு விரந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மணிகண்டனை தாக்க தொடங்கியிருக்கிறார்கள். பதட்டமடைந்த அவரது நண்பர்கள் பதிலுக்கு தாக்க அவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

தப்பியோட முயன்ற மணிகண்டனை காலில் ஒருவர் வெட்டி இருக்கிறார். மற்றொருவர் அவர் தலையை வெட்டி துண்டித்திருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். உடனடியாக மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மணிகண்டன் உடலை கைப்பற்றினர். ஆனால் கொலை செய்தவர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என மணிகண்டனின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு எழுந்தது. உறவினர்களிடம் பேசிய போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் சாதித்தலைவர் ஒருவருக்கு வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் மணிக்கண்டனுக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரிய வந்துள்ளது. கொலை சம்பவத்திற்கு இந்த முன்விரோதம் காரணமா என்பது குறித்து போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.