1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (18:02 IST)

கொலை வழக்கில் இருந்து பிரபல எழுத்தாளர் விடுதலை!

சென்னை கோயம்பேட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர், கவிஞர் பிரான்சிஸ் கிருபா குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர்.
 
மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியவர் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா. இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் அமர்ந்திருந்ததால் பிரான்சிஸ் கிருபா அந்த நபரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர்.
 
இந்த தகவல் தமிழ் வாசகர் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த நபர் வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்பட்டார். 
 
'நான் கொலை செய்யவில்லை, அந்த நபருக்கு உதவிதான் செய்தேன் என்று எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கூறியும் தன்னை போலீசார் கைது செய்ததாகவும், தற்போது பிரேத பரிசோதனையின் அறிக்கைக்கு பின்னரே தான் விடுவிக்கப்பட்டதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.